தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப் பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில் இருந்தே பிற மொழிகள் தோன்றின என்பதே உண்மையாகும்.
தமிழ்மொழி இந்நாட்டில் முதல் மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி; ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)தமிழ்க்குடும்ப மொழிகள்தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ் மாமணி முனைவர் சி.இலக்குவனார்.
இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்லிநடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தென்னாசியா அளவில் தமிழ்க்குடும்பத்தில் 86 மொழிகள் உள்ளன.
இந்திய மொழிகளின் தாய்தமிழ்மொழி இந்திய மொழிகளின் தாய் என்று சொல்வதற்குரிய உரிமையும் தகுதியும் உடைய மொழி. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்). தமிழை உலக மொழிகளின் தாய் என்றும் பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். மக்களினங்களில் தமிழினம், தொன்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்டது. இதனாலேயே தமிழே உலக முதன் மொழி என்றும் உலக மொழிகளின் தாய் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும் என்கிறார் அவர் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்37). எனினும் இங்கே இந்திய மொழிகளின் தாய் என்பதன் காரணம், இந்திய மொழிகளுக்கிடையே தமிழுடன் உள்ள நெருங்கிய தாய்-சேய் உறவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
தமிழே உலக மொழிகளின் தாய்மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான உலக அறிஞர்கள் பலரும் “தமிழே உலக மொழிகளின் தாய்” என்று நிறுவியுள்ளனர். அவ்வாறெனில் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தமிழ்க்குடும்ப மொழிகள்தாம். அவற்றில் ஒரு பகுதி நெருங்கிய உறவு மொழிகளாகவும் பெரும்பகுதி உறவாக இருந்து விலகிய மொழிகளாகவும் உள்ளன.
எனினும் தென்னிந்திய நாட்டில் உள்ள தமிழ்க்குடும்ப மொழிகள் தமிழின் சேய் மொழிகளே என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இச்சேய்மொழி பேசுவோர், தங்கள் மொழி தமிழின் சேய் என ஒத்துக்கொள்ள மறுக்கினறனர். தாய் அழகாக இல்லாவிட்டாலும் அறிவாக இல்லாவிட்டாலும் தாய், தாய்தான். ஆனால், வளமும் சீரும் சிறப்பும் உயர்தனிச் செம்மொழித் தன்மையும் உள்ள தமிழின் சேய்மொழி பேசுநர் தமிழின் மக்கள் எனச் சொல்வதை இழிவாகக் கருதுகின்றனர். அதே நேரம் சமற்கிருத மொழியின் சேய் எனக் கூறுவதற்கு மகிழ்ச்சி அடைகின்றனர்.
தொன்மையான மூத்த மொழி தமிழ்“இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிசித் தீவு, தென்னாப்பிரிக்கா, மோரீசசு, பிரிட்டன், தயானா, மடகாசுகர், திரினிடாட்டு, ஆத்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தொன்மை யும், இலக்கண இலக்கிய வளமும் உடைய தமிழ் மொழி பேசப்படுகிறது என்பது மொழி குறித்தான பெருமைகளாகும். தனித்த இலக்கண வளமும், பிறமொழித் தாக்கம் குறைந்தும், திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாகவும், சொல் வளமும், சொல்லாட்சி உடையதாகவும் தமிழ் உள்ளது. மேலும், இந்திய அளவில் கல்வெட்டுத்துறையின் ஆராய்ச்சியின் பெரும்பகுதி தமிழில் இடம்பெற்றுள்ளதும் தொன்மையான மூத்த மொழி தமிழ் என்பதும் ஆய்வாளர்களின் பார்வையாகும். தனித்தன்மை மாறுபடாமல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குவதால், பல நூற்றாண்டுகள் கடந்தும் தழைத்தோங்கி விளங்கு கிறது. “(முனைவர் வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர், தினமணி , 11.02.2019)திராவிடம் பிற்காலப் பெயர்தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர். திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது. கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்கிறார் தொல்காப்பிய அறிஞர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279
“திராவிடக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ். பிற அவற்றிலிருந்து பிறந்தவை அல்ல. திராவிடத் தாயிலிருந்து பிறந்தவை. எனவே, உடன் பிறப்பு மொழிகள்” என்று தவறாகக் கூறி வருகின்றனர். “தமிழ் மொழிக்குத் "திராவிடம்' என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனம் கூறினர்.
இன்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டு களுக்கு முன் இருந்த ஏரோடட்டசு முதலிய பழைய கிரேக்க ஆசிரியர், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது "தமிழ்' என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர். (சங்கநூற் கட்டுரைகள். பக்கம் 145). அவ்வாறிருக்கும்பொழுது எப்படித் திராவிட மொழியின் பிள்ளைகளாக மொழிகள் இருக்கமுடியும்?
அவ்வாறெனில் அத்திராவிடமொழியின் எழுத்துகள் யாவை? அதன் சொற்பெருக்கம் யாவை? ஒன்றுமில்லையே. எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளைத் தமிழின் சேய்மொழிகள் என்னும் உண்மையை மறைத்து, இல்லாத் திராவிடத்தின் சேய்களாகவும் தமிழுக்கும் குடும்ப மொழிகளுக்கும் உள்ள தாய் சேய் உறவைத் திரித்து, உடன்பிறப்பு மொழிநாளாகவும் கூறுவது தவறெனலாம்.
மூலத் திராவிட மொழி என்னும் கதைதமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப் பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதேநேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை மூலத் திராவிடம் அல்லது தொல் திராவிடம் எனலாம். அதிலிருந்தே தமிழ், தெலுங்கு முதலான மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும்” என்று ஆய்வுரை போன்று பொய்யுரை பரப்புகின்றனர். மூலத் திராவிட மொழி என்றால் மக்கள் ஏற்கவில்லையே. எனவே, தொல் தமிழ் மொழி என்றும் மூலத் தமிழ் மொழி என்றும் சொல்லிப் பார்த்தனர். எவ்வாறிருப்பினும் அது தமிழ்தானே என்றதும மீண்டும் மூலத்திராவிடமொழி என்றும் தொல் திராவிடமொழி என்றும் பிதற்றி வருகின்றனர். திராவிடம் என்பதே கற்பிதமாக இருக்கும்பொழுது தொல்திராவிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
மொழி ஒப்பாய்வு தேவையே!
இந்த மொழியிலிருந்து இந்த மொழி தோன்றியது, இம்மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது, இந்த மொழி மூத்தது, அந்த மொழி பிந்தையது என்பன போன்ற கருத்தாடல்கள் தவறு என்பார் உள்ளனர். தங்கள் மொழியைவிடப் பிற மொழி உயர்வு என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் கூற்று இவை. எந்த மொழியையும் இழிவாகவோ தாழ்த்தியோ கூறக்கூடாதுதான்.
ஆனால், மொழிகளின் சிறப்புகளையும் உயர்வு களையும் மொழியின் பண்புகளையும் நிறைகுறைகளையும் ஒப்பிடுவது தவறல்ல. மொழிகளின் ஒப்பாய்வும் தேவையானதே. எனவே, தவறான வாதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உலகின் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் இருப்பதையும் அதன் சிறப்புகளை ஏற்பதும் தவறல்ல. அவ்வாறு ஒப்புநோக்கிப் பார்க்கும் பொழுதுதான் தமிழ் உலக மொழிகளின் தாயாகவும் அந்த முறையில் கன்னடத்தின் தாயாகவும் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
பழம் மொழிகள் பத்தின் காலம்
குமரிநாடன், கோரா தளத்தில், மொழி வல்லுநர்
களின் கருத்துகளின் அடிப்படையில் உலகின் பழமை
யான பத்து மொழிகளின் காலத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
10. அரபு மொழிக் காலம்: கிமு 100
9. ஆர்மேனியன் மொழிக் காலம்: கிமு.450
8. சமற்கிருத மொழிக் காலம்: கிமு 600
7. இலத்தீன் மொழிக் காலம் கி.மு 700
6. அராமிக்கு மொழிக் காலம்: கிமு 900
5. எபிரேய மொழிக் காலம்: கிமு.1200
4. சீன மொழிக் காலம்: கி.மு 1250
3. கிரேக்க மொழிக் காலம்: கிமு.1600
2. எகித்து மொழிக் காலம்: கிமு 3300
1. தமிழ் மொழிக் காலம்: கிமு.5000
கன்னடம் பிற்பட்ட மொழியே!
தமிழின் காலத்தை இன்னும் பழமையாகக் கூறுவோரும் உள்ளனர். எவ்வாறிருப்பினும் கன்னட மொழிக்காலம் இப்பட்டியலில் வரவில்லை.. ஏனெனில் கன்னடம் கி.பி.கால மொழியே. எனவே அது தமிழுக்குப் பிற்பட்ட மொழியே. கன்னட மொழியினர் சிலர் கன்னடத்தைத் தமிழின் தாய்மொழியாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அறியலாம்.
தென்னிந்திய மொழிக் குடும்பம்
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக் கண்ணாக அயோத்திதாசப் பண்டிதரால் குறிக்கப்பெற்றவர் பிரான்சிசு வைட்டு எல்லிசன் (எழ்ஹய்ஸ்ரீண்ள் ரட்ண்ற்ங் ஊப்ப்ண்ள்). இவர்தான் 1816ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, "தென்னிந்திய மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன்முதலில் வெளிப்படுத்திய வர்.
செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன.
தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார்.
“இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழில் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே உள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு குறைந்த மொழிப் பகுதிகள் காலம் செல்லச் செல்ல உருமாறிக்கொண்டே வந்துவிட்டன. செப்பமுற்ற தமிழையொட்டி அவை இயங்குவதற்கேற்ற சூழ்நிலைகள் இல்லை..” (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)
மலையாளத்தை அடுத்துத் தமிழோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பது கன்னடம். கன்னடம் என்ற சொல் கருநாடகம் என்ற சொல்லின் சிதைவாகும். கருநாடகம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல்லாகும். அதிலிருந்து தோன்றிய கன்னடம் மொழியைக் குறிப்பதாகும். (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் குமாரிலபட்டர் தென்னிந்திய மொழிகளைக் குறிக்குங்கால் ஆந்திர திராவிட பாசா என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரம் தெலுங்கையும் திராவிடம் தமிழையும் குறிப்பதாகும். ஆதலின் கன்னடம் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப் பெறவில்லை. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,
பழந்தமிழ்) தமிழோ இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தைய தொல்காப்பியத்தை உடையது. அந்நூல்வழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை அறியலாம். தொல்காப்பியத் தில் மொத்த நூற்பாக்கள் 1571; இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல்லதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும் என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15) எனவே, இத்தகைய தொன்மையான தமிழ் வழங்கிய பகுதியில் இருந்த ஒரு மொழி பேச்சு வழக்கால் புதுமொழியாக மாறியிருக்கும்பொழுது தமிழில் இருந்து பிறந்ததுதான் அப்புதுமொழியாகிய கன்னடம் எனச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? இத்தகைய கன்னட மொழியைத் தமிழின் தாயாகச் சிலர் கூறுவது எத்தகைய அறியாமை மிக்கது?
கன்னடம் எப்பொழுது எப்படிப் பிறந்தது?
“பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் வடசொற் கலப்பு மிகுதியாலும் ஒலி வேற்றுமைச் சிதைவாலும் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்துவிட்டது” என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார் (பழந்தமிழ்) கொடுந்தமிழ் வழக்கே கன்னடமாக மாறியது என்னும் பொழுது தமிழ்தானே கன்னடத்தின் தாய் என்பது சரியாக இருக்கும்.
கன்னட மொழியின் முதல் இலக்கியமே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுதான் "தென்னிந்திய மொழிகள் எனப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழோடு தாம் கொண்டுள்ள நெருங்கிய உறவை இன்னும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவை தமிழிலிருந்து விலகி ஆரியத்தோடு தொடர்புகொண்டு தனி மொழிகள் ஆகிவிட்டன. அவ்வாறு ஆன பிறகு அவற்றில் இலக்கியம் தோன்றிய காலம் வடஇந்திய மொழிகளின் இலக்கியக் காலத்தையே ஒட்டியுள்ளது. . . . . . . . . . . . . . கன்னட மொழியில் நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கியம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இயற்றப்பட்ட கவிராச மார்க்கமாகும்." எனப் பழந்தமிழ் நூலில் குறிப்பிடுகிறார்.
தமிழின் தாய்மையை ஒத்துக்கொள்வது பிற மொழி களைத் தரம்தாழ்த்தும் செயலல்ல!
“தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர்.
தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இதுகுறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்:
“ஓர் அம்மாவிற்கு இத்தனை மகள்கள் என்று சொல்வது அந்த மகள்களை தரம் தாழ்த்துவதாகுமா? அனைத்து உலக மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழ் தான் என்பது பெருமைக்குரிய விசயம் தானே? எந்த ஓர் அகழ்விலும் தமிழைத் தாண்டிய தொன்மையான மொழியே இந்தியாவில் கிடைக்காதபோது எதை வைத்துத் தமிழ் மொழி குடும்பத்தில் வந்த மொழிகள் தமிழைவிட மூத்தது?
எத்தனை சங்கங்கள் வைத்து மொழி வளர்த்தன இம்மொழிகள்?
தமிழ் மொழி எதையும் நிலைநாட்ட வேண்டியதில்லை உண்மை என்னவோ அதைத் தான் சொல்கிறார்கள். வெற்றுப் பெருமையை நாடும் பிற மாநில மக்கள் தேவையில்லாத போட்டி யில் இறங்குவதுதான் தவறானது உண்மைக்குப் புறம்பானது.”(மகள், மகன் என்பனவற்றிற்குப் பன்மை மக்கள்.)
இதே வினாவிற்கு ஆராய்ச்சியாளர் இரவிசிவன் பின்வருமாறு விடையிறுக்கிறார்காலச்சூழலில் தாயைவிட்டு தொலைதூரம் சென்ற காரணத்தினால் மற்றும் அறியாமையால் தாயைத் தெரியாத குழந்தைகள் இருக்கலாம். ஆனால் தாய்க்கு மட்டும்தான் தெரியும் தன்னிலிருந்தே பிறந்தவர்கள் இவர்கள் என்று. அவர்களுக்கு இச்செய்தியை உணர்த்த வேண்டிய கடமையும் தாய்க்குத்தான் உண்டு.
இல்லையெனில், தாயை வழிபடவேண்டிய பிள்ளைகள் மூடர்களின் வழிகாட்டுதலில் தன் பிறப் புக்கு காரணமான தாயைத் தூற்றிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
தாயும் வாயை மூடி மௌனித்திருந்தால், தகுதியற்றவள்கூட உள்ளே நுழைந்து 'தான் தான் தாயென'- சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடுவாள். (விட்டாள்??).
கன்னடம் திரிந்துள்ள முறைகள்
மொழி ஞாயிறு பாவாணர், பேரா.முனைவர் சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் கன்னடம் திரிந்துள்ள முறைகள் எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
1. ப ஃக வாக மாறியுள்ளது.
பள்ளி ஃகள்ளி; பாடு ஃகாடு.
2. உயிரீற்றுப் பேறு.
எதிர் எதிரு; இருந்தேன் இருந்தேனெ.
3. தொகுத்தல் திரிபு.
இருவர் இப்பரு; இருந்தேன் இத்தேன.
4. வல்லொற்று மிகாமை.
ஓலைக்காரன் ஓலகார; நினக்கு நினகெ.
5. சொற்றிரிபு.
மற்றொன்று மத்தொந்து
முதலாயின மொதலானய.
6. போலி.
வேடர் பேடரு ; செலவு கெலவு.
7. எதிர்மறை இடைநிலைக் குறுக்கம்
இராதே இரதெ.
8. பெயரீற்றுப் பால் விகுதிக் கேடு.
குருடன் குருட; மகன் மக;
அப்பன் அப்ப.
9. வேற்றுமை உருபின் திரிபு.
நின்னால் நின்னிந்த
நின்கண் நிந்நொள் நிந்நல்லி
10.விகுதி மாற்றம்
அன் அம் ஆதல்;
செய்கிறேன் செய்தபெம்.
இவ்வாறு இலக்கண வகையாக மொழியியல் நோக்கில் அறிஞர்கள் மெய்ப்பித்திருக்கும்பொழுது தமிழ்த்தாயிலிருந்து பிறந்ததே கன்னடச்சேய் என்னும் ஆய்வு உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்?
கன்னடத்தை முற்பட்டதாகக் கூறும் தவறான வாதங்கள்கன்னடத்தைக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்று முற்பட்டதாகக் காட்ட சிலர் முயல்கின்றனர்.
ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் தமிழுக்குப் பிற்பட்டதே ஆகும். எனினும் இவ்வாறு கூறுவது தவறு எனப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார்.
“கன்னடச் சொற்கள் கிரேக்க மொழியார் நூல்களில் காணப்படுகின்றனவென்றும், அந் நூல்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறிக் கன்னடத்தின் பழமையை நிலை நாட்டுவாருமுளர்.
கன்னட மொழியின் பழமையான நூல் கவிராசமார்க்கம் என்ற இலக்கண நூல்தான். அதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். அஃது ஓர் அணியிலக்கண நூலாக இருத்தலினால் அதற்கு முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்பாரும் உளர். கி.பி. ஆறாம் நூற்றாண் டுக்கு முன்னர்க் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் இலக்கியம் தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர் வரையறுத்துள்ளனர்.” எனவே, முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் தவறாகும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்...)